டெல்லி:
தவறான நடவடிக்கைகளால் கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். தற்போது மேலும், ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மாநில அரசு சார்பில் உணவு பொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு உணவு பொருட்களை பெறுவோர் ‘‘நான் ஏழை’’ என்று அவரவர் வீட்டு வெளிப்புறச் சுவரில் பெயின்ட் மூலம் எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற இந்த உத்தரவை தொடர்ந்து சிக்ரை மற்றும் பந்திகுய் தாலுகாக்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இது போன்று எழுதி வைக்கப்பட்டுளளது. அரசின் திட்டங்களை வசதி படைத்தவர்கள் பெற்று விடக்கூடாது என்ற காரணத்தால் இது போன்று எழுத உத்தரவிட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின, சிறுபான்மை மக்கள் தான் பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

இது குறித்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,‘‘10 கிலோ கோதுமை வாங்குவதற்காக நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலையை இந்த புதிய உத்தரவு ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த வாசகத்தை அழித்துவிட்டு தங்களுக்கு மானிய விலையில் கோதுமை வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர்’’ என்றார். இது தவிர இவ்வாறு ‘நான் ஏழை’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டால் ரூ. 750 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், ‘‘இது ஒரு மோசமான நகை ச்சுவையாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டால் அது மக்களின் சட்டப்பூர்வ உரிமையாகும். அது அரசின் சலுகை கிடையாது. இதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ அரசு ஏழைகள் விரோத போக்கை கடைபிடிக்கிறது’’ என்றார்.

தவுசா மாவட்ட கூடுதல் கலெக்டர் சர்மா கூறுகையில்,‘‘ இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெறப்படும் ரேசன் பொருட்களை தவறாக பயன்ப டுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தான் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும்’’ என்றார்.

இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு பில்வாரா டவுனில் வறுமை கோட்டிற்கு கீழ் வரும பயனாளிகளின் வீடுகளில் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி பயனாளிகள் பெயர், அவரது அடையாள எண் ஆகியவற்றை எழுதி வைத்த சம்பவம் நடந்துள்ளது.