மகள் வயதுள்ள மாணவியை மணக்க ஆசைப்பட்ட ‘பெயிண்டர்’..

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த பெருமாள், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

மனைவியை இழந்த 47 வயது பெருமாளுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெருமாள், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியிடம், அவர் மகளைத் திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

கூலித்தொழிலாளி கொஞ்ச நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வருபவர். ஏழ்மையான குடும்பம்.

’பிளாஸ்-ஒன்’ படிக்கும், தனது 16 வயது மகளை, பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார், அந்த ஏழை தொழிலாளி.

குடும்ப நிலவரம் அறிந்திருந்த 16 வயது மாணவியும், 47 வயது பெருமாளைக் கல்யாணம்  செய்து கொள்ள வேறுவழி இல்லாமல் ஒப்புக்கொண்டார்.

வரும் வியாழக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.

இது குறித்த தகவல், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்

அவர்கள் பணகுடி போலீசை உஷார் படுத்த, அவர்கள் வருவாய் அலுவலர்களுக்குச் செய்தி சொன்னார்கள்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், மறுகால்குறிச்சிக்கு விரைந்து சென்று, மாணவியின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.

’திருமண வயது எட்டாத சிறுமிக்குக் கட்டாய கல்யாணம் செய்து வைக்கலாமா?’’ எனக் கேட்டபோது, அந்த தந்தை மவுனம் சாதித்துள்ளார்.

‘’ 18 வயது ஆகும் வரை என் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன்’’ என அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு,  திருமணத்தை நிறுத்திய திருப்தியுடன், அதிகாரிகள் ஆபீஸ் திரும்பினர்.

-பா.பாரதி