ராவல்பிண்டி

பாலகோட் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா தொடந்து பொய் சொல்லி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி பாலகோட் பகுதியில் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

அப்போது அங்கிருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. பாகிஸ்தான் அதை மறுத்தது. அதன் பிறகு எல்லை தாண்டி தாக்குடல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானப்படையை விரட்டிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டார்.

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட அவர் பிடிபடும் முன்பு ஒரு பாக் விமானத்தை வீழ்த்தியதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தான் இந்த செய்தியையும் மறுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

அப்போது ஆசிஃப், “புல்வாமாவில் நடந்தது போன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நிகழ்ந்துள்ளன. அதற்காக இந்தியா பாலகோட் விமானப்படை தாக்குதலை நடத்தியது. அதில் எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவிலை. ஆனால் இந்தியா எங்களுக்கு பாதிப்பு அடைந்ததாக தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது.

இந்திய பத்திரிகையாளர்கள் விரும்பினால் நாங்களே தாக்குதல் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம். அவர்கள் அங்குள்ள நிலையை நேரில் கண்டு உண்மையை தெரிந்துக் கொள்ளலாம். கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து இந்தியா பொய் சொல்லி வருகிறது. ஒரு பொறுப்பான நாடு என்னும் முறையில் நாங்கள் அந்த பொய்க்கு பதில் அளிக்காமல் இருக்கிறோம்.

இந்திய விமானி எங்கள் நாட்டு போர் விமானத்தை வீழ்த்தியதாக இந்தியா அடுத்து ஒரு பொய் தகவலை அளித்துள்ளது. இது தவறானதாகும். இரு இந்திய விமானங்களை எங்கள் விமானிகள் சுட்டு வீழ்த்தினர். அதில் வந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மற்றவர் பிடிபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் அணு ஆயுத மிரட்டலுக்கு பயப்படாமல் நாங்கள் அமைதியை விரும்புவதால் அவரை விடுவித்தோம்.” என தெரிவித்துள்ளார்.