பாகிஸ்தான் தேர்தல் : இம்ரான் கான் முன்னணியால் முடிவுகளை அறிவிக்க தாமதம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி முன்னணியில் இருப்பதால் முடிவுகளை அறிவிக்க தாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.

நேற்று பாகிஸ்தான் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.   அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.   இந்த தேர்தலில் நவாஸ் ஷெரிஃப் கட்சி,  இம்ரான் கட்சி மற்றும் மறைந்த பெனாசிர் பூட்டோ கட்சி என மும்முனை போட்டி உள்ளது.   முதலில் தேர்தல் முடிவுகள் குறித்து வந்த செய்திகள் தற்போது வெளிவராமல் உள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

கடைசியாக வெளிவந்த முடிவின்படி இம்ரான் கான் 114 இடங்களிலும் நவாஸ் ஷெரிஃப் 64 இடங்களிலும் முன்னணியில் உள்ளதாக தெரிய வந்தது.   இம்ரான் கான் முன்னணியில் உள்ளதால் தேர்தல் முடிவுகள் வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

ஆணையம் அறிவித்திருந்தபடி முடிவுகள் இன்று அதிகாலை 2 மணிக்கு வெளிவந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.   ஆணைய செயலர் பாபர் யாகூப், “ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகளால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது.   மின்னணு தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்போதுள்ள நிலையில் முடிவுகள் வெளி வரும் நேரம் பற்றி சரியாக கூற முடியாது.   எனினும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.    இந்த தேர்தலில் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிப்பது தவறானது” எனக் கூறி உள்ளார்