இந்தியாவிடம் உதவி கேட்கும் இந்திய இதயங்களை நொறுக்கிய பாக் ஹாக்கி வீரர்

ராவல் பிண்டி

பாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீரர் தனது இதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி உள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுடனான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இந்தியா விலகி உள்ளது.   அதே நேரத்தில் மருத்துவ உதவி கேட்கும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வர மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கி வருகிறது.    அவ்வகையில் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் ஹாக்கி வீரர் மன்சூர் அகமது நேற்று மருத்துவ விசா கோரி விண்ணப்பித்துள்ளார்.

பாகிஸ்தான் ஹாக்கி அணியை பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறச் செய்த ஹாக்கி வீரர்களில் மன்சூர் அகமதுவும் ஒருவர் ஆவார்.   அவர் நேற்று செய்தியாளர்களிடம், “கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த இந்திரா காந்தி கோப்பை பந்தயத்தில் இந்தியாவை தோற்கடிக்க நானும் உதவி புரிந்தேன்.   அதனால் நான் பல இந்திய இதயங்களை உடைத்து நொறுக்கினேன்.   தற்போது எனக்கு இருதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதனால் இதய மாற்று சிகிச்சை அவசியமாக உள்ளது.    அதனால் இந்தியா வந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது.   நான் தற்போது இந்தியாவிடம் எனது இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.   இந்திய அரசு எனக்கு உதவும் என நம்புகிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.