இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

தற்போது 69 வயதாகும் நவாஸ், சிறை தண்டனை அனுபவித்துவரும் இந்நேரத்தில், கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.

அவர் சார்பில், வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது. அதேசமயம், அவருக்கு வெளிநாட்டிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்க மருத்துவர்களும் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் அவர் விமானத்தில் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். மேலும், நவாஸ் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார். தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், சில நாட்களில் நவாஸ் லண்டன் செல்வார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.