இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – சர்வதேச நாணய நிதியம்(‍ஐஎம்எஃப்) இடையில், $6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதார நிவாரணத்திற்கான முதல்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்தப் பொருளாதார நிவாரணத்தை, பதவிக்கு வருவதற்கு முன் எதிர்த்துவந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தற்போது அதை வேறுவழியின்றி ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பொருளாதார நிலை, சமீப காலங்களில், தற்போதுதான் மிக மோசமான நிலையில் உள்ளது. அந்நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி சமன்பாட்டில் பெரிய வேறுபாடு நிலவுகிறது.

ஏற்கனவே, சீனாவிடம் அதிகளவு கடன் வாங்கியுள்ள அந்நாட்டின் பொருளாதாரம், இந்த ஆண்டில் மேலும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில்தான் சர்வசேத நாணய நிதியத்துடனான பொருளாதார நிவாரண ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தமானது, பாகிஸ்தானின் மேல் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று அந்நாட்டின் பல அரசியல் தலைவர்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.