பிலாவல் புட்டோ குறித்த சர்ச்சைக்குரிய கருத்து : இம்ரான் கானுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்

லாகூர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈரான் சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் அதிகம் உள்ளதாகவும் அவர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தனது நாடு தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்துள்ளதை அவரே ஒப்புக் கொண்டது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.

நேற்று முன் தினம் இம்ரான் கான் தெற்கு வஸிரிஸ்தான் நகரில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அந்த கூட்டத்தில், “நான் மிகவும் போராடி கடுமையாக உழைத்து பதவிகு வந்துள்ளேன். ஆனால் பெனாசிர் புட்டோ மகனான பிலாவல் புட்டோ சர்தாரி  கொல்லப்பட்ட தனது தாயின் மரணத்தை காட்டி அரசியல் கட்சிக்கு தலைவராகி உள்ளார்.” என குறிபிட்டார்.

இதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், “இது மிகவும் மோசமான, அவமானகரமான, வருந்தத் தக்க மற்றும் பொறுப்பற்ற விமர்சனம் ஆகும். பாகிஸ்தான் பிரதமர் தான் பிரதமராக பதவி வகிக்க லாயக்கற்றவர் என நிரூபித்து விட்டார். இது பாகிஸ்தானுக்கு ஒரு துக்க நாளாகும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிலாவல் புட்டோ தனது டிவிட்டரில், “பெரிய பதவியை பிடித்த சிறிய மனிதர்” என இம்ரான் கானை விமர்சித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி