பயங்கரவாதத்தை அழிக்காத பாகிஸ்தான் அரசு : மக்கள் கண்டனம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை அழிக்கவில்லை என அந்நாட்டு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெற  உள்ளது.  அதை ஒட்டி தேர்தல் பிரசாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.   பொதுத் தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டை ஆள காபந்து அரசு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.    தேர்தலுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு அனைத்து தீவிரவாதக் குழ்களும் அடியோடி அழிக்கப்பட்டு விட்டதால் இனி பயங்கர வாதம் தலை தூக்காது என அறிவித்திருந்தது.

ஆனால் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பல கூட்டங்களில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    இந்த பிரசாரக் கூட்டங்களில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் இரு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.   அத்துடன் பொதுமக்களில் சுமார் 150 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

மரணம் அடைந்த பொதுமக்களுக்காக நாடெங்கும் ஒரு நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.  இதை ஒட்டி இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன.   அந்த இரங்கல் கூட்டங்களில் ஏராளமான பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.   இந்த கூட்டங்களில் பேசிய மக்கள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

பயங்கரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் நாட்டின் பிரபல தினசரியான எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் தனது தலையங்கத்தில், “அரசு அனைத்து தீவிர வாதக் குழுக்களையும் அழித்ததாக பெருமை கூறுகிறது.   ஆனால் அந்த பெருமையில் தற்போது ரத்தம் சொட்டும் துளை ஏற்பட்டுள்ளது.    தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் ஈ தாலிபான் குழு இன்னும் இயங்கி வருகிறது.

அது மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கும் எந்த ஒரு தாக்குதல் குறித்தும் உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்துள்ளது.   அது மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்த காபந்து அரசு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.    இவை அனைத்தும் அரசின் கடமை என்பதை யாராவது அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.