ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாக் திட்டம்

டில்லி

ப்கானிஸ்தான்  மற்றும் பஸ்தூன் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விதி எண் 370ஐ விலக்கியதன் மூலம் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தைப் பல நாடுகள் மற்றும் ஐநா  பாதுகாப்பு கவுன்சில் வரை எடுத்துச் சென்றும் பாகிஸ்தான் கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

பாகிஸ்தான் தனது எல்லைப்   பகுதியில் ஏராளமான படைகளைக் குவித்துப் போர் விமானங்களைத் தயாராக வைத்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இந்திய அரசு பதில் தாக்குதல் நடத்த ஏதுவாக தனது படைகளை எல்லையில் நிறுத்தி உள்ளது. அத்துடன் உள்நாட்டில் பல நகரங்களில் தாக்குதல் நடத்தி இந்திய அமைதியைக் குலைக்கப் பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்திய உளவுத்துறை, “ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் தீவிரவாதிகள் 100க்கும் மேற்பட்டோரை இந்திய எல்லை வழியாக நாட்டினுள்  ஊடுருவ பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இவர்கள் மூலம் நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் ஏற்படுத்தி இந்தியாவின் அமைதியைக் குலைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் பயிற்சியைப் பெற்று எல்லையில் ஊடுருவி மிகப் பெரிய தாக்குதல் நடக்கச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

இந்த தீவிரவாதிகள் லிபா பள்ளத்தாக்கு வழியாக ஊடுருவத் திட்டமிட்டுள்ளனர். அதனால் மற்ற எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகளை நிறுத்தி இந்தியாவைத் திசை திருப்ப முயல்கிறது. இவர்கள் காஷ்மீரில் மட்டுமின்றி இந்தியாவில்  பல பகுதிகளில் ஊடுருவித் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக இந்த தீவிரவாதிகள் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் இந்த தாக்குதலை நடத்த உள்ளதால் எல்லைப் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை” என எச்சரித்துள்ளது.