Random image

முதல் சுற்றுப்பயணம்: 2 நாள் பயணமாக சவுதி செல்கிறார் பாக் பிரதமர் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சவுதி அரேபியா செல்கிறார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த  தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவோடு  ஆட்சியை பிடித்தது. பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிக்க, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  பிரதமர் பயன்படுத்தும் விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில் விட்டுள்ளார். விலை உயர்ந்த சொகுசு ரக கார்களான மெர்சிடஸ் பென்ஸ், 8 பி.எம்.டபிள்யூ கார்கள், 4,000சிசி திறன்  கொண்ட 2 புல்லட் ப்ரூப் வாகனங்கள், 16 டொயோட்டா கார்கள், 4 புல்லட் ப்ரூக் லேண்ட் குரூசர் கார்கள், லெக்ஸஸ் ரக கார்கள் உள்ளிட்ட 102 சொகுசு கார்கள் கடந்த 17ந்தேதி ஏலம் விடப்பட்டது.

அதுபோல, பிரதமர் நவாஸ் செரீப்பின் 8 எருமைகளையும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோக பயன்படுத்தப்படாமல் உள்ள 4 ஹெலிகாப்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இம்ரான்கான் முதன்முறையாக அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு பயணமாக உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரேபிய அரசர்  சல்மான் பின் அப்துல்அஜிஸ் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று 2 நாள் பயணமாக இன்று சவுதிக்கு பயணமாகிறார்.

இந்த விஜயத்தின் போது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுஃப் பின் அஹ்மத் அல்-ஒத்மெயேன் அழைப்பை ஏற்று அவருடன் உம்ரா செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து  கான் மற்றும் அவரது பிரதிநிதிகள் சவுதி அரேபியாவிலிருந்து யு.ஏ.ஏக்குச் செல்வார்கள் என்றும்,  19ம் தேதி  அபுதாபியில் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இளவரசர் முகம்மத் பின் ஸைத் அல் நஹியான் உடன் சந்திப்பு நடைபெறுகிறது. அப்போது,  இருநாட்டு  தலைவர்களும் இருதரப்பு பிரச்சினைகள் பற்றி விவாதிப்பார்கள் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.