லாகூர்

பாகிஸ்தானிய சீக்கியரான ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியரை மணம் முடித்த விவகாரத்தில் பெற்றோர் பாக் பிரதமர் இம்ரான் கான் உதவியை நாடி உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து, சீக்கியர் மற்றும் கிறித்துவப் பெண்களைக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவர்களை இஸ்லாமிய இளைஞர்களுக்குத் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது.  இதற்குப் பல மவுல்வி என அழைக்கப்படும் இஸ்லாமிய மத குரு துணையாக உள்ளனர்.   இவ்வாறு சமீபத்தில் ஒரு சீக்கியப் பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்துள்ளது.

லாகூரில் உள்ள நான்கானா சாஹிப் பகுதியில் உள்ள குருத்வாராவில் பூசாரியாக உள்ளவரின் 19 வயது மகள் சமீபத்தில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் அவர் வீட்டில் இருந்து கடத்திச் சென்றவர்கள் மதமாற்றத்துக்குப் பிறகு அவருக்கு  ஒரு இஸ்லாமிய இளைஞரைத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தலைமை நீதிபதி ஆசிஃப் சையத் கோஷா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.   அவர்கள் முதலில்  காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அந்த புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் இவர்களையும் கடத்திச் சென்று மதம் மாற்ற உள்ளதாக கடத்திச் சென்றவர்கள் மிரட்டியதால் இந்த புகாரை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு உலகெங்கும் உள்ள சீக்கிய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  பாகிஸ்தான் வாழ் சீக்கியர்கள் இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் கடும் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்     டில்லி வாழ் சீக்கியர்கள் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என மனு அளித்துள்ளனர்.