லாகூர்: இந்த 2019ம் ஆண்டின் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில், பாகிஸ்தானும் ஒன்று என அந்த அணியின் முதன்மை தேர்வாளரும், முன்னாள் கேப்டனுமான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கவுள்ளது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. மார்ச் 31ம் தேதி நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

ஆனால், அதற்கு முன்பாக, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு செல்கிறது பாகிஸ்தான் அணி. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, ஆஸ்திரேலிய அணியிடம் முழுமையாக இழந்தது பாகிஸ்தான் அணி.

ஆனால், அத்தொடரில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. எனினும், நல்ல ஆட்டத்தையே அணியினர் வெளிப்படுத்தினர் என்று இன்சமாம் திருப்தி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்படும் அணிகளில் பாகிஸ்தானுக்கும் நிச்சயம் இடமுண்டு என அவர் தெரிவித்தார். உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் அணி விபரம் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி