இனி எந்த ஒரு நாட்டுடனும் பாகிஸ்தான் போரிடாது : இம்ரான் கான்
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் இனி எந்த ஒரு நாட்டுடனும் போரிடாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. அந்தப் போரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 6 ஆம் தேதியை தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது. அவ்வாறு இந்த ஆண்டு தியாகிகள் தினத்தன்று பிரத்மர் இம்ரான் கான் உரையாற்றினார்.
இம்ரான் கான் தனது உரையில், “பாகிஸ்தான் ராணுவத்தை போல் உலகில் வேறெந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதில்லை. போரினால் சுமார் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
அதைவிட போரினால் பாகிஸ்தானுக்கு ஏகப்பட்ட பொருள் இழப்பும் கடன் சுமைகளும் ஏற்பட்டுள்ளது. அதனால் பாகிஸ்தான் இனி எந்த ஒரு நாட்டுடனும் போரிடாது. இனி நமது வெளியுறவுக் கொள்கைகளில் தேச நலன் மட்டுமே முக்கியமாக இருக்கும்.
அமைதி நிலவ மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்பி கல்வி கற்க வைக்க வேண்டும். அது மட்டுமின்றி மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மருத்துவமனைகளை அதிகரிக்க அரசு எண்ணி உள்ளது. பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.” என கூறி உள்ளார்.