புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இந்தியத் திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த திரைப்பட நிறுவனமானது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய திரைப்பட பணியாளர்கள் சங்கம் (ஏஐசிடபிள்யுஏ) அறிவித்துள்ளது.

actors

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சார்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் நட்புறவு நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கு 200 சதவீதம் வரிவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒவ்வொரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அனைத்து இந்திய திரைப்பட பணியாளர்கள் சங்கம், இந்தியாவில் எந்த திரைப்படத்திலும் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இந்திய திரைப்பட பணியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் நமது வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை அனைத்து இந்திய திரைத் தொழிலார்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். மனிதநேயமற்ற இந்த தாக்குதலுக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக நாங்கள் நிற்போம்.

இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த நடிகரும், நடிகையும் பணியாற்ற தடை விதிக்கிறோம். ஒருவேளை எந்த அமைப்பாவது பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களை பணியமர்த்தினால், அவர்கள் மீது தடைவிதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்துக்காக துணை நிற்போம் “ என கூறப்பட்டுள்ளது.