பாகிஸ்தான் தற்கொலப்படை தாக்குதல் : கட்சி தலைவர் உள்ளிட்ட 14 பேர் மரணம்

பெஷாவர்

பாகிஸ்தான் தேர்தல் கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசியக் கட்சி தலைவர் உள்ளிட்ட 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

வரும் 25ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ளது.   அதை ஒட்டி தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெறுகிறது.   பல கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றன.   பெஷாவர் நகரில் அவாமி தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அக்கட்சியின் தலைவர் ஹரூன் பிலோர் வந்திருந்தார்.  அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு தரப்பட்டது.   அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தன்னிடம் பொருத்தி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பில் ஹரூன் பிலோர் உள்ளிட்ட 14 பேர் உடல் சிதறி மரணம் அடைந்துள்ளனர்.  அத்துடன் 43 பேர் படு காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.   தாலிபன்களுக்கு எதிரான கருத்துக்களை ஹரூன் கூறி வந்ததால் இந்த தாக்குதலுக்கு அவர்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.