லாகூர்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவருமான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத செயல்களுக்கு பண உதவி வழங்கிய விவகாரத்தில் லக்வியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வழக்கில் 2015ம் ஆண்டு முதல் ஜாமீனில் இருந்து வரும் லக்வி, இன்று பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் எந்த இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பதை கூற பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு போலீஸார் மறுத்துவிட்டனர். இதுகுறித்து பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவினர் வெளியிட்ட செய்தி குறிப்பில்  கூறப்பட்டு உள்ளதாவது:

உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்புப்பிரிவினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகளுககு நிதியுதவி அளித்த புகாரில் லக்வி கைது செய்யப்பட்டுள்ளார். லாகூர் போலீஸில் லக்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிய மருத்துவமனை நடத்தி, அதன்மூலம் தீவிரவாதத்துக்கு நிதி அனுப்பி வரும் பணியை லக்வி செய்துவந்துள்ளார். இம்மருத்துவமனை மூலம் வரும் பணத்தையும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார். லாகூர் நீதி மன்றத்தில் லக்வி மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.