இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான் எல்லை முழுவதும் தடை!

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் வான் எல்லை முழுவதும்  இந்தியா மற்றும்  ஆப்கானிஸ்தான் நாட்டு விமானங்கள் பறக்க  தடை விதிப்பது குறித்து  முடிவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து தொடர்பான இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370 மற்றும் 35ஏ ஷரத்துக்களை மத்திய அரசு கடந்த (ஆகஸ்டு) 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் ஐ.நா உள்பட உலக நாடுகளின் உதவியையும் நாடி வருகிறது. ஆனால், மற்ற நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்  வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் இம்ரான் கான் தலைமையில் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியாவுக்கான வான்வெளியை முழுமையாக மூடவும், இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கான வான் எல்லையை மூடுவது மற்றும் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான சட்ட முறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள் ளார்.

ஏற்கனவே பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்து மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் இந்தியாவுடனான போக்குவரத்து, வர்த்தகத்தை நிறுத்தி உள்ள நிலையில் தற்போது வான்வெளி போக்குவரத்தையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.