பாகிஸ்தானில் ஹேக்கர்களின் கைவரிசையால் பண பரிவர்த்தனைகள் முடக்கம்!

பாகிஸ்தானில் வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் சிலர் முறைகேடாக திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் நடைபெற உள்ள பண பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு ஏராளமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய அரசு அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Bank_Hacked

பெடரல் விசாரணை முகமையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்ததையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 28 தேதிகளில் சுமார் 12 வங்கிகளைச் சேர்ந்த 8,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

பேங்க் இஸ்லாமியிலிருந்து ரூ.2.6 மில்லியன் தொகை திருடப்பட்டுள்ளது. சர்வதேச பேமெண்ட் கார்டுகள் மூலம் இந்தத் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து பேங்க் இஸ்லாமி தனது ஆன்லைன் வர்த்தக நடவடிக்கை, கார்டு சிஸ்டம் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் களவாடப்பட்ட 2.6 மில்லியன் ரூபாய்களை வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கியே செலுத்தி விட்டது என்று பேங்க் இஸ்லாமி தெரிவித்தது.

கான் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி தன் கணக்கிலிருந்து ரூ.30 லட்சம் திருடப்பட்டுள்ளதாக பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக, எஃப்.ஐ.ஏ. சைபர் கிரைம் அதிகாரி மொகமத் ஷோயப் கூறும்போது, “பெரும்பாலான பாகிஸ்தானிய வங்கிகளிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளது” என்றார்.

“ மொத்தமாக எத்தனை பேர் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் களவு போயுள்ளது என்பது தீர்மானமாகத் தெரியவில்லை, வங்கிகள் இதனை மறைக்கவே முயற்சி செய்யும் ஏனெனில் இது வங்கிகளின் மீதான நம்பகத்தன்மையை கெடுத்து விடும் என்று வங்கி ஊழியர்கள் சிலர் கூறினர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளிப்பதில்லை, காரணம் வங்கிகள் அவர்கள் இழந்த தொகையை கொடுத்து விடுகிறது. ஆகவே எவ்வளவு பேர் பணத்தை இவ்வாறு பறிகொடுத்தனர் என்பதைச் சரியாக கணக்கிட முடியவில்லை “ என்று மற்றுமொரு அதிகாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த குற்ற விவகாரம், உலகின் மிகப்பெரிய சைபர் விதிமீறலாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் பாகிஸ்தான் வங்கிகள் சர்வதேச அளவில் நடைபெறும் பண பரிவர்த்தனையை தடை செய்துள்ளன. மேலும், மொபைல் பேக்கிங் சேவையும் பாகிஸ்தானில் தற்காலிகமாக நிறுத்தபப்ட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் புலனாய்வு அமைப்பு, அனைத்து வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.