ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தலைநகரில் காணப்பட்ட இந்திய ஆதரவு சுவரொட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இந்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவுக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் இந்தியா எங்கும் கிளம்பி உள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த அஞய் ரவுத், “இன்று நாம் ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளோம். நாளை நாம் பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அடைவோம். அகண்ட இந்தியாவை அடைய வேண்டும் என்னும் கனவைப் பிரதமர் மோடி நிறைவேறுவார் என நான் நிச்சயமாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில்  இந்தியாவுக்கு ஆதரவாகப் பல சுவரொட்டிகள் காணப்பட்டன. இந்த சுவரொட்டிகள் பல பாதுகாப்பு மிகுந்த இடங்களிலும் காணப்பட்டன. இதில் அகண்ட இந்தியா எனப்படும் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் வரைபடம் மற்றும் சஞ்சய் ரவுத் படங்களுடன் அவருடைய மேலே கூறப்பட்ட தகவலும் காணப்பட்டன.

நேற்று காலை இந்த சுவரொட்டிகள் அமைக்கப்பட்ட நிலையில் வெகு நேரம் அதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். அதன் பிறகு அதைக் கவனித்த சிலர்  காவல்துறையினரிடம் புகார் அளித்ததால் அந்த சுவரொட்டிகள் உடனடியாக நீக்கப்பட்டன. இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு ஐந்து மணி நேரம் கழித்து இஸ்லாமாபாத் நிர்வாகம் இவற்றுக்குத் தடை விதித்தது.

இது குறித்து நடந்த விசாரணையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் நகரின் பல இடங்களில் இந்த சுவரொட்டிகளை அமைத்தது தெரிய வந்துள்ளது. இந்த நபர்களின் இச்செய்கை நகரின் பல இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளது. நேற்று இரவு இது குறித்து ஒரு நபர் கைது  செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.