இஸ்லமாபாத்:

ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.


கடந்த மே 1-ம் தேதி ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தலைவர் மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் அறிவித்தது.

புல்வாமா தாக்குலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா மட்டும் முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இறுதியில் சீனா சம்மதிக்க, மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அறிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜமாதுத் தாவா, ஃபலா-இன்ஸானியத் பவுன்டேசன் மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புகளின் தொடர்புடைய 11 இயக்கங்கள் தடை செய்யப்படுகின்றன.

தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய செயல் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தடுக்க 20 அம்ச திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெஷாவரில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதில் 133 பேர் இறந்தனர். இதனையடுத்து, தேசிய நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.