டில்லி

காஷ்மீரில் இருந்து இனி அழகிய மணமகள் கிடைப்பார்கள் என்னும் அரியானா முதல்வர் கருத்துக்கு ராகுல் காந்தி வழியில் பாகிஸ்தான் ஐநாவுக்கு எழுதிய கடிதத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5 ஆம் தேதி அன்று ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு ஜனாதிபதி 6 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தார். அத்துடன் அந்தப் பகுதி ஜம்மு மற்றும் காஷ்மீர் என  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று பாஜக மூத்த தலைவரும் அரியானா முதல்வருமான மனோகர் லால் கட்டார், “தற்போது காஷ்மீர் திறந்த வெளி ஆகி உள்ளது. அங்கிருந்து அழகான மணமகள்களை நாட்டின் பிற பகுதி மக்கள் பெற  முடியும்” என தெரிவித்தார். இதற்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு கட்டார் தாம் ஒரு நகைச்சுவைக்காக அவ்வாறு குறிப்பிட்டதாகக் கூறினார்.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தி மத்திய அரசிடம்  காஷ்மீரில் நடப்பவை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர், ’காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நடைபெறுபவை தவறானது எனத் தகவல்கள் வருகின்றன. அதற்கேற்றாற்போல் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நடப்பவை குறித்த வெளிப்படையான அறிக்கைகளைப் பிரதமர் அளிக்க வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தான் அரசின் மனித உரிமைத் துறை அமைச்சர் ஷிரீன் மஸாரி ஐநாவுக்கு 7 பக்க கடிதமொறை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் ராகுல் காந்தி  குறிப்பிட்டதையும் அரியானா முதல்வர் கருத்தையும் தெரிவித்துள்ளார். இது பாஜக வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி பொறுப்பின்றி தெரிவித்த கருத்துக்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தி கடிதத்தில் வெளியிட்டதாக மத்திய அரசு அவருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் காஷ்மீர் மாநிலம் இந்தியாவைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டிருந்தது பாஜகவினரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.