இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இதுவரை 213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவிய இந்த கொடிய வைரசால் இதுவரை 7000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 100க்கும் அதிகாமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 988 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் பாகிஸ்தானில் இதுவரை 213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 149 பேர் பாகிஸ்தான், ஈரான் எல்லையில் உள்ள தப்தான் என்ற தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பிறகு, அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை. முன்னதாக, லாகூரில் ஒரு மரணம் பதிவானதாக உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதில் உண்மை இல்லை என்று அந்நாடு அறிவித்து இருக்கிறது.