இந்து சகோதரிகளை கணவர்களுடன் வாழ அனுமதித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானின் 2 இந்து சகோதரிகளை, கணவர்களுடன் சேர்ந்துவாழ அனுமதித்துள்ளது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், இந்து குடும்பத்தைச் சேர்ந்த ரீனா மற்றும் ரவீனா என்ற 2 சகோதரிகள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, முஸ்லீம் மதத்திற்கு பலவந்த மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணமும் செய்விக்கப்பட்டதாக, அப்பெண்களின் குடும்பத்தார் சார்பில் புகாரளிக்கப்பட்டது. மேலும், அப்பெண்களுக்கு தலா 13 மற்றும் 14 வயதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ரீனா, ரவீனா மற்றும் அவர்களுடைய கணவர்களான சஃப்தார் அலி மற்றும் பர்கத் அலி ஆகியோரின் சார்பில், பாதுகாப்பு வேண்டி மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், தாங்கள் இஸ்லாமிய போதனைகளின்பால் கவரப்பட்டே விரும்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாகவும் அப்பெண்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருதரப்புகளும் தொடர்புடைய வாக்குமூல வீடியோக்களும் வலம் வந்தன. நீதிமன்ற விசாரணையின்போது ஆஜரான அரசின் உள்விவகார செயலாளர், அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், மருத்துவப் பரிசோதனையில், அப்பெண்கள் முறையே 18 மற்றும் 19 வயதுள்ளவர்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அப்பெண்கள், தத்தமது கணவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

– மதுரை மாயாண்டி