பாகிஸ்தானின் அட்டூழியம் : இந்திய ராணுவ அதிகாரிகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள்
டில்லி
இந்திய ராணுவ அதிகாரிகளின் பெயரில் பாகிஸ்தான் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி தவறான தகவல் பரப்பி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய அரசு கடந்த மாதம் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. கலவரத்தைத் தவிர்க்க மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுள்ளன. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியா மீது நடவடிக்கை எடுக்க பாக் விடுத்த கோரிக்கையைப் பல நாடுகள் நிராகரித்துள்ளன.
எனவே இந்திய நாட்டின் மீது அவப்பெயரை உருவாக்கப் பாகிஸ்தான் சதித்திட்டம் தீட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில் இந்திய உயர் ராணுவ அதிகாரிகளின் பெயரில் டிவிட்டரில் பல போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகள் மூலம் பாகிஸ்தான் பல பொய்த் தகவல்களை வெளியிட்டு உலக அளவில் இந்தியாவின் மீது அவப்பெயரை உண்டாக்க முயன்றுள்ளது.
இவ்வாறு இந்திய ராணுவத் தலைமை தளபதி, ராணுவ உயர் அதிகாரிகளின் பெயரில் பல போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய ராணுவம், ”ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட பல அதிகாரிகளின் பெயரில் சுமார் 200க்கும் அதிகமாக டிவிட்டர் கணக்குகளை பாகிஸ்தான் உருவாக்கி உள்ளது. அந்த கணக்குகள் மூலம் இந்தியாவுக்கு எதிரான பல பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய ராணுவம் டிவிட்டருக்குப் புகார் அளித்தது. தற்போது அந்தப் போலிக் கணக்குகளில் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிபின் ராவத், வடக்கு ராணுவ தளபதி ரன்பீர் சிங், முன்னாள் அதிகாரிகள் தேவராஜ் அன்பு, பி எஸ் நேகி உள்ளிட்ட பலர் பெயரில் தொடங்கப்பட்ட டிவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.