அரியானா மணமகளை மணம் புரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி

துபாய்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி அடுத்த மாதம் துபாயில் அரியானாவைச் சேர்ந்த மணமகளான ஷாமியா அர்ஜு என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார்.

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில்  உள்ள சந்தேனி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் வட்டார முன்னேற்ற அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இவருடைய ஆறாவது மகள் ஷாமியா அர்ஜு என்பவர் ஃபரிதாபாத் நகரில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு அதன் பிறகு ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் துபாயில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணி புரிபவர் ஆவார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  பிரபல கிரிக்கெட் வீரரான அசன் அலிக்கும் அர்ஜுவுக்கும் இடையே திருமணப் பேச்சு கடந்த வருடம் நடந்துள்ளது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்தை அடுத்த்த மாதம் 15-16 தேதிகளில் துபாயில் நடத்த உள்ளனர். இந்த தகவலை அர்ஜுவின் அண்ணன் உறுதி செய்துள்ளார்.

அர்ஜுவின் அண்ணன் அக்பர் அலி, “எனது தங்கை ஷாமியா அர்ஜு அடுத்த மாதம் துபாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலியைத் திருமணம் செய்ய உள்ளார். நாங்கள் வெகு நாட்களாக ஃபரிதாபாத் நகரில் வசித்து வருகிறோம். எங்கள் இரு குடும்பங்களும் சென்ற வருடம் துபாயில் சந்தித்து இந்த சம்பந்தத்தை முடிவு  செய்துள்ளனர். அடுத்த மாதம் என் தங்கையின் திருமணம் 15-16 தேதிகளில்  துபாயில் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இரு வீட்டினரும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு இந்திய மணமகளைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திருமணம் செய்வது நான்காம் முறையாகும். ஏற்கனவே ஜகிர் அப்பாஸ், மோசின் கான் மற்றும் சோயிப் அக்தார் ஆகிய மூன்று பாகிஸ்தானி கிரிக்கெட் வீரர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துள்ளனர்.