லாகூர்: பாகிஸ்தான் வீரர்கள் பள்ளிக்கூட பையன்கள் மாதிரி டெஸ்ட் விளையாடுகிறார்கள் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கொள்கையை மாற்றியமைக்க வ‍ேண்டுமெனவும் விமர்சித்துள்ளார் அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.

தற்போதைய நிலையில், பாகிஸ்தானை பொறுத்தவரை, கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு, உடனடியாக கருத்து தெரிவித்து விமர்சிப்பவராக உள்ளார் சோயிப் அக்தர்.

அவர் கூறியுள்ளதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த மாதிரியான கொள்கையை வெளிப்படுத்துகிறதோ அதுபோன்ற கிரிக்கெட்டைத்தான் பார்க்க முடியும். பாகிஸ்தான் அணியில் சராசரியான வீரர்கள்தான் இருக்கிறார்கள். சராசரியான வீரர்களை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடங்களில் விளையாடும் கிரிக்கெட்டைத்தான் விளையாட முடியும்.

சராசரியான வீரர்களைக் கொண்ட ஓர் அணி, சராசரியான விளையாட்டைத்தான் விளையாட முடியும். கிடைக்கும் முடிவுகளும் அப்படித்தான் இருக்கும். பாகிஸ்தான் அணி எப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் அதன் சாயம் வெளுத்துவிடுகிறது.

பள்ளியில் விளையாடப்படும் கிரிக்கெட்டைப்போல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் வாரியமும், பள்ளியில் விளையாடும் வீரர்கள் போன்றவர்களைத்தான் அணியில் வைத்துள்ளது. மீண்டும் கிரிக்கெட் மேலாண்மையை மாற்றுவது குறித்து சிந்திப்பார்கள். ஆனால், எப்போது மாற்றப்போகிறார்கள்?” என்றுள்ளார் அவர்.