Random image

பாகிஸ்தான்: சீக்கியர்கள் விசா இன்றி கர்தார்பூர் குருத்வாரா செல்ல அனுமதி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க குருத்வாராவுக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் நேரடியாக சென்று வர அனுமதி அளிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த இம்ரான் கான் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இத் தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாவத் சவுத்ரி மேலும் கூறுகையில்,‘‘கர்தார்பூர் குருத்வாராவுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் சென்று வரும் நடைமுறையை மேம்படுத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. முன்னேற்றகரமான இந்த திட்டம் குறித்த அறவிப்பு விரைவில் வெளியாகும்.

சீக்கிய யாத்ரீகர்களுக்கான பாகிஸ்தான் எல்லை கதவுகள் விரைவில் திறக்கும். இதன் மூலம் விசா இல்லாமல் குருத்வாரா தர்பார் சாஹிப்பை சென்றடையலாம். யாத்ரீகர்ள் வந்து செல்ல புதிதாக சாலை அமைக்கப்படும். யாத்ரீகர்கள் திரும்ப செல்வதற்கு டிக்கெட் வாங்க வேண்டும்’’ என்றார்.

இந்த திட்டம் நிரந்தரமானதா? அல்லது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குருநானக் தேவின் 550வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறதா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மத்திய அரசும் இதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இது குறித்து பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நிருபர்களிடம் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் நாரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கும், குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் இடையிலான தூரம் 6 கீ.மீ மட்டுமே. இதற்கு வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது இந்தியாவில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.