லாகூர்:

பாகிஸ்தானின் வான் எல்லை வழியே பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பறப்பதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.


ஜுன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்கேக் நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப் படை தாக்கியதையடுத்து, வான் வெளியில் விமானப் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது.

அப்போதிலிருந்து தெற்கு பாகிஸ்தான் வழியாக 2 வழித் தடங்களின் வழியாக விமானங்கள் பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அனுமதி கேட்டு இந்தியா வேண்டுகோள் விடுத்தது.

இதனையடுத்து, பாகிஸ்தான் வான் எல்லையில் பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பறக்க அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அனுமதியளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை அடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்புக்கு, இந்தியா செவிசாய்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் உள்ளிட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் இம்ரான் கான் ஆர்வம் காட்டுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.