கடைசி டி-20 போட்டியில் பாகிஸ்தான் வென்றாலும், தொடரை வென்றது நியூசிலாந்து!

ஆக்லாந்து: நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதேசமயம், இத்தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் மார்டின் குப்தில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். டிம் செய்ஃபர்ட் 35 ரன்களை எடுக்க, டெவான் கான்வே 45 பந்துகளில் 63 ரன்களை அடித்தார்.

கிளென் பிலிப்ஸ் 20 பந்துகளில் 31 ரன்களை எடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளையும், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 59 பந்துகளில் 89 ரன்களை அடித்தார். முகமது ஹபீஸ் 41 ரன்களை அடிக்க, மற்ற பேட்ஸ்மென்களின் சுமை பெரியளவில் குறைந்தது.

முடிவில், 19.4 ஓவர்களிலேயே, 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.