குருத்வாரா செல்ல இந்திய தூதருக்கு அனுமதி மறுத்த விவகாரம்….பாகிஸ்தான் விளக்கம்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஹசன் அப்தல் நகரில் சீக்கியர்களின் குருத்வாரா பஞ்சா சாஹிப் கோவில் அமைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இங்கு செல்ல பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாரியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இச்சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சையது ஹய்தர் ஷாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து அந்த துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறுகையில், ‘‘ராஜா ரஞ்சித் சிங் நினைவு நாளை முன்னிட்டு புனித ஸ்தலத்தில் கூடியிருந்த சீக்கிய யாத்ரீகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் அவர்கள் அவமதிக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குறிய திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பைசாரியா தனது பயணத்தை ரத்து செய்ய சம்மதம் தெரிவித்தார்’’ என்றார்.

பாகிஸ்தானில் இது போன்று நடப்பது 2வது முறையாகும். கடந்த ஏப்ரலிலும் பைசக்தி விழாவை கொண்டாட இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

You may have missed