புழல்: புழல் மத்திய சிறைக்குள், பாகிஸ்தான் தேசியக்கொடி மற்றும் மொபைல் போன் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, புழல் பகுதியில் உள்ள  மத்திய சிறை, 220 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு மூன்றடுக்கு உயர் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறையில்  பயங்கரவாதிகள் உட்பட, பல முக்கிய குற்றவாளிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் நிலவரப்படி, தண்டனை கைதிகளாக, 680 பேரும் விசாரணை கைதிகளாக, 1,784 பேரும் மகளிர் சிறையில், 123 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையின் வெளிப்புற பகுதியை கண்காணிக்க, 12 உயர் கோபுரங்களில், ‘ஷிப்ட்’ முறையில் காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடவார்கள்.

இத்தனை பாதுகாப்பு இருந்தும் மதில் சுவருக்கு வெளியே இருந்து, சில கைதிகளுக்காக, சிறைக்குள் கஞ்சா, மொபைல் போன் ஆகியவை மர்மநபர்களால் அடிக்கடி வீசப்படுவது வழக்கமாக இருக்கிறது. இது தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை, 7:30 மணியளவில், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகத்தில், ஜெயிலர் ஜெயராமன் தலைமையிலான சிறப்பு சோதனை குழுவினர், மிதிவண்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முதலாவது கண்காணிப்பு கோபுரம் அருகே, கருப்பு நிற பொட்டலம் ஒன்று கிடந்தது. கஞ்சா, மொபைல் போன் போன்றவற்றை பொட்டலமாக கட்டி, மர்மநபர்கள் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிறப்பு குழுவினர் அதை கைப்பற்றினர். பிறகு  பொட்டலத்தை, சிறை அதிகாரிகள் முன்னிலையில் பிரித்தபோது, 44 செ.மீ., நீளம்; 24 செ.மீ., அகலம் உடைய பாகிஸ்தான் தேசியக் கொடியும், சுதந்திர தினத்தன்று, சட்டையில் அணியும் சிறிய பேப்பர் கொடிகள், 103ம் இருந்தன.

மேலும், சிம்கார்டு இல்லாத, புதிய மொபைல் போன் மற்றும் பேட்டரியும் இருந்தது. இதனால், சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அவற்றை சிறைக்குள் வீசிய மர்மநபர்கள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புழல் போலீசில் ஜெயிலர் ஜெயராமன புகார் அளித்தார். பாகிஸ்தான் கொடி, புழல் சிறைக்குள் வீசப்பட்டதற்கான காரணம் என்ன, ஏதாவது சதி திட்டம் உருவாகி உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதைச் சீர்குலைக்கவோ, அந்த நேரத்தில் சிறைக்குள் பாகிஸ்தான் கொடியை ஏற்றவோ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்றும் விசாரணை நடந்துவருகிறது.