தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரிஃப்

ஸ்லாமாபாத்

ஜாமீன் முடிவடைந்தும் ஆஜராகாத பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை அந்நாட்டு அரசு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்குப் பாகிஸ்தான் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதையொட்டி  லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.  கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

நவாஸ் ஷெரிபை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் உடனடியாக, லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு  சிகிச்சை பெற்ற பிறகு அவர் வீடு திரும்பி அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இஸ்லாமாபாத் நீதிமன்றம் உடல்நலக் குறைவு காரணமாக நவாஸ் ஷெரீப்புக்கு  சுமார் 8 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது.  நவாஸ் ஷெரிஃப் லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில்  மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.   ஜாமீன் முடிந்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

இதையொட்டி பாகிஸ்தானின் டான் ஊடகம்  “ஜாமீன் விதிமுறைகளை மீறியதன் காரணமாக நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த முடிவு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த கூட்டத்தில்; எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு, “லண்டனில் உள்ள எந்த மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் சிகிச்சை எடுக்கிறார் என்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதை அடுத்து, அவர் அனுப்பிய மருத்துவச் சான்றிதழைப் பாகிஸ்தான் மருத்துவ வாரியம் நிராகரித்தது. இதனால்  அரசு அவரைத் தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி