இந்திய அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்துக்கு எரிவாயு அளிக்க மறுக்கும் பாகிஸ்தான்

ஸ்லாமாபாத்

ஸ்லாமாபாத் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள இந்திய குடியிருப்பு வளாகத்துக்கு எரிவாயு இணைப்பு அளிக்க பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டினர் இடையே தொடர்ந்து பகை மனப்பான்மை நிலவி வருகிறது.    இந்த மனப்பான்மை அதிகார வட்டத்திலும் எதிரொலித்து வருகிறது.   இந்திய வலைத்தளங்களில் பாகிஸ்தான் ஊடுருவி முடக்குவது குறித்து ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி உள்ளன.   அது மட்டுமின்றி பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் மேற்கு வங்கத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் நடந்துள்ளது.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தூதரக அதிகாரி சோகைல் முகமது கொல்கத்தா நகருக்கு வர அனுமதி கேட்டுள்ளார்.   அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   தங்கள் அதிகாரியை வேண்டுமென்றே நகருக்கு வர அனுமதிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்தது.

ஆனால் சட்டப்படி ஒவ்வொரு தூதரக அதிகாரியும் இந்திய நகரங்களுக்கு செல்ல குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும் எனவும்,  சோகைல் முகமது தாமதாக அனுமதி கேட்டதால் கிடைக்கவில்லை எனவும் இந்தியா தரப்பில் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய அரசு அதிகாரிகள் தங்க ஒரு குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டிருந்தது.     சோகைல் முகமது அனுமதி மறுப்பு சம்பவத்துக்கு சில தினங்களுக்கு பிறகு அங்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் திடீர் சோதனை நடத்தியது.   அவர்களுடன் வந்த உள்ளூர் அதிகாரிகள் அந்த கட்டிடத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர்.

அந்த வளாகத்தில் பல இந்திய அதிகாரிகள் வசித்து வரும் நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களுக்கும் இணைப்பை வழங்க அரசு மறுத்துள்ளது.   கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கபட்ட போதிலும் எரிவாயு இணைப்பை அளிக்க இன்னும் அரசு மறுத்து வருகிறது.   இதனால்  அங்கு வசிக்கும் அதிகாரிகள் கடும் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அந்த வளாகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.   அதனால் பெரும்பாலான நேரங்களில் அந்த வளாகம் இருளாக காணப்படுகிறது.   அது மட்டுமின்றி அந்த வளாகத்தில் உள்ள ஒரு அதிகாரியின் இருப்பிடத்தின் கதவை உடைக்க ஒருவர் முயன்றுள்ளார்.   ஆட்கள் வருவதைக் கண்டு அவர் தப்பி ஓடி உள்ளார்.   அது குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு பாகிஸ்தான் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

இது குறித்து அங்கு வசிக்கும் இந்திய அரசு அதிகாரிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.