தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளது மற்ற நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் தீர்மானத்தை நிறைவேற்றி, நீக்கியது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனது பகுதியாக சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. இந்தியாவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ”பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையில் ஆக்கப்பூர்மான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகும். இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல் அவசியம். லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதும், எல்லைத் தாண்டி தாக்குதல்களை நடத்துவதும் தான் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக உள்ளது” என்று தெரிவித்தார்.