புதுடெல்லி: கர்தார்பூர் காரிடார் தொடர்பாக பாகிஸ்தானால் அமைக்கப்பட்டுள்ள குழுவில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் இடம்பெற்றிருப்பது குறித்து, இந்தியா தனது கடும் ஆட்சேபத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் துணை ஹை கமிஷனருக்கு, இந்தியா சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வரும் ஏப்ரல் 2ம் தேதி, காரிடார் நடைமுறைகள் தொடர்பாக நடக்கவிருந்த இருநாடுகளின் கூட்டு சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சேபணை தொடர்பாக, பாகிஸ்தான் அளிக்கவுள்ள பதிலை வைத்தே, அடுத்த சந்திப்பு நடைபெறும் என இந்தியா சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் அமைத்துள்ள குழுவில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களான மணீந்தர்சிங் தாரா மற்றும் கோபால் சிங் சாவ்லா ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்ததுதான் தற்போதைய சிக்கலுக்கான முக்கிய காரணம்.

“கர்தார்பூர் காரிடார் விவகாரம் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது மற்றும் இந்த விஷயத்தில், வேறுபாடுகளை களைவதற்கு பாகிஸ்தானின் உண்மையான அக்கறை என்ன என்பது குறித்து அந்நாடு விளக்க வேண்டும்” என இந்தியா சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி