காஷ்மீர் எல்லையில் தொடரும் பாக். அத்துமீறல்கள்: இந்திய ராணுவம் பதிலடி

குப்வாரா: காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீரின் வடக்கே குப்வாரா மாவட்டத்தின் தங்தார் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக். ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இன்று தாக்குதலில் ஈடுபட்டது. பீரங்கி குண்டுகளையும், பிற ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில் பொதுமக்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் தாக்குதல்கள் எதிரொலியாக எல்லையில் பாதுகாப்பு பணிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.