பூனைக் காதுடன் முகநூல் வீடியோவில் தோன்றிய பாகிஸ்தான் அமைச்சர்

ஸ்லாமாபாத்

முகநூல் வீடியோ மூலம் கலந்தாய்வு நடத்திய பாகிஸ்தான் அமைச்சர் சவுகத் யூசுப்சாய் சிறப்பு அமைப்பை தவறுதலாக பயன்படுத்தியதால் பூனை காதுடன் தோன்றி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துக்வா மாநிலத்தின் தகவல்துறை அமைச்சராக  சவுகத் யூசுப்சாய் பதவி வகித்து வருகிறார்.   அவர் சமீபத்தில் மாநில சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி முகநூல் மூலம் வீடியோ கலந்தாய்வு நடத்தி செய்தியாளர்களுக்கு அதை தெரிவித்தார்.

முகநூல் வீடியோ மூலம் பேசும் போது அந்த ஊடகத்தில் ஒரு சில சிறப்பு அமைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  அதன் படி பேசுபவர் தனது முகத்தில் பூனை, ராட்சசன் உள்ளிட்டவைகள் போல முகத்தை மாற்றிக் கொள்ள முடியும்.   பூனை சிறப்பு அமைப்பை உபயோகித்தால் முகத்தில் பூனைக் காது, மற்றும் பூனை மீசை தெரிய வரும்.

இந்த கலந்தாய்வின் போது அமைச்சர் சவுகத் தவறுதலாக பூனை அமைப்பை செயல்படுத்தி உள்ளார்.   அதனால் அவர் முகம் பூனைக் காதுகள் மற்றும் மீசையுடன் தெரிந்துள்ளது.   விவரம் தெரிந்த உடன் அவர் அந்த அமைப்பை அணைத்து விட்டார்.   ஆயினும் இந்த புகைப்படம் வலைதளங்களில் பரவி உள்ளது.

இதை பதிந்த டிவிட்டர் பயனாளி ஒருவர், “இந்த பூனையை யார் துரத்துவது>” என கேட்டுள்ளார்.   அதற்கு பின்னூட்டத்தில் ஒருவர், ”பாகிஸ்தான் அமைச்சர் தனக்கு பொருத்தமான முகத்தை முகநூல் மூலம் தேர்வு செய்துள்ளார். ” என கிண்டல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.