பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றுகளால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் முதல் பாதிப்பு அறியப்பட்ட பின்னர் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இது தவிர்த்து ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளிலும் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் கராச்சி நகரில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தெருக்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதில் சிக்கிய மக்களை மீட்க படகுகளை அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளனர். கராச்சியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்குவாவில் கடும் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர்.

கனமழையால் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால், 1.5 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. போதிய உதவி செய்யவில்லை என கூறி குடியிருப்புவாசிகள் பலர் அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்நாட்டில், கடந்த ஜூன் முதல் மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 136 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.