இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்த மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குறித்து கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்கப் பதிவர்(blogger) சிந்தியா டி.ரிட்ச்சீ, 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது விசா காலத்தை நீட்டிக்குமாறு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் பதிவர் சிந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“தான் பாகிஸ்தானை விட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால், வாஷிங்டனில், எனது செயல் அதுவரை கண்டிராத மோசமான ஒன்றாக அமையும்” என்று எச்சரித்துள்ளார் சிந்தியா டி.ரிட்ச்சீ.

முன்னாள் பிரதமர் சார்ந்திருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில், மறைந்த பெனாசிர் புட்டோ குறித்து கண்ணியக் குறைவான கருத்து தெரிவித்த காரணத்தால், அவரை வெளியேற்ற உத்தரவிட வேண்டுமென மனுதாக்கல் செய்திருந்தது. எனவே, இதுகுறித்து முடிவெடுக்குமாறு, அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டிருந்தது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.