தடை செய்யப்பட்ட இயக்கங்களை அபாயகரமானவை என அறிவித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்

தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் அபாயகரமானவை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடு பயங்கரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக பல உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிற்கு இந்த குற்றசாட்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகள் பயங்கரவாத நிதி அளிப்பு தடை அமைப்பு பாகிஸ்தானுக்கு இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் பரிந்துரைப்படி தற்போது பாகிஸ்தானை உலக நாடுகள் உள்ளிட்ட நிதி அமைப்புகள் கிரே பட்டியலில் வைத்துள்ளன.  அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் தனது நாட்டில் இயங்கி வரும் பல தீவிரவாத இயக்கங்களை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. ஆனால் நிதித்தடை அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கங்கள் எந்த அளவுக்கு அபாயமானவை என அறிவிக்காத பாக் அரசை வன்மையாக கண்டித்துள்ளது.

அந்த அமைப்பின் அறிக்கையில், “பாகிஸ்தான் அரசு தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உத்வி அளிப்பதில் உள்ள அபாயம் குறித்து சரிவர புரிதல் இல்லாமல் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள டேஷ், அல் கொய்தா, ஃபதிஷ் ஈ இன்சானியத் ஃபவுண்டேஷன், லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் ஈ முகமது, ஹக்கானி அமைப்பு ஆகிய அனைத்தும் தாலிபன்களுடன் தொடர்புடைய இயக்கங்கள்” என தெரிவித்தது.

இதை ஒட்டி பாகிஸ்தான் இந்த இயக்கங்களை மிகவும் அபாயகரமானவை என அறிவித்துள்ளது.

”இந்த இயக்கங்கள் இந்த அறிவிப்பினால் மிகவும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும். அவர்களின் தற்போதைய மற்றும் முந்தைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆராயப்படும். மற்றும் இந்த இயக்கங்களை சேர்ந்த அனைவரும் விசாரணைக்கு உட்படுத்த படுவார்கள்” என பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.