மின் கட்டணம்  ரூ. 41 லட்சம் செலுத்தாத பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்

 

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபல  முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேக்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது இருந்தே பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி நிலவி வருவதால் அவர் தனக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளைத் தேவையில்லை என மறுத்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் அவர் அமெரிக்காவுக்குச் சென்ற போதும் பயணிகள் விமானத்தில் சென்றார்.

ஆயினும் பாகிஸ்தான் பொருளாதார நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. பிரதமரின் அத்தியாவசிய செலவான அவர் அலுவலக மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமாபாத் மின்  விநியோக வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுமார் ரூ. 41 லட்சம் மின் கட்டண பாக்கியைப் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செலுத்தாமல் உள்ளது. இதில் கடந்த மாதத்துக்குள் செலுத்த வேண்டிய ரூ.35 லட்சம் மின்சாரக் கட்டணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் இன்னும் செலுத்தவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்கு இது தொடர்பாகப் பலமுறை தகவல் அனுப்பியும் பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்ந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மிகவும் தர்ம சங்கடமான.  நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.