சீக்கிய யாத்ரீகர்களுக்காக 5-நட்சத்திர விடுதிகள் கட்ட அரசு நிலம் வழங்க முடிவு! பாக்.அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்:

ஞ்சாப் மாகாணத்தின் கார்டர்பூர், நாங்கானா சாஹிப் மற்றும் நாரோவல் நகரங்களில் நவீன ஹோட்டல்களைக் கட்டுவதற்கு உதவும் வகையில், சீக்கிய அமைப்புகளுக்கு நிலம் வழங்குவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது நேற்று அறிவித்தார்.

பாகிஸ்தானுக்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களுக்காக கார்த்தார்பூரில் ஒரு ரயில் நிலையமும் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப் பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், கார்டர்பூர் மற்றும் நாங்கனா சாஹிப்பில் 10 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதேபோல், நாரோவில் ஐந்து நட்சத்திர விடுதிகளை அமைக்க சீக்கிய அமைப்புகளுக்கு 5 ஏக்கர் நிலமும் வழங்கியுள்ளது என்றார்.

மேலும், நாங்கனா சாஹிப்பில் இருந்து கார்டர்பூருக்கு ரயில் சேவைகள் வழங்கப்படும் எனவும் அனைத்து சீக்கிய புனித யாத்ரீக ஸ்தலங்களுக்கு அருகே விடுதிகளும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.