730 நாள் விடுப்பு கேட்ட பாகிஸ்தான் இரயில்வே அதிகாரி!

பாகிஸ்தானில் இரயில்வேதுறை அமைச்சர் மீது அதிருப்தியடைந்த அதிகாரி ஒருவர், 730 நாள் விடுமுறை கேட்டு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இம்ரான்கான் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்றது.  இதனால், அமைச்சரவை மாற்றப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் புதுபுது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஷேக் ரஷீத்

ரயில்வேதுறையின் புதிய அமைச்சராக ஷேக் ரஷீத் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், அங்குள்ள ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் என்பவர் 730 நாட்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்று கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். இத்தனை நாள் விடுமுறை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுப்பு கடிதம்

இதைவிட விடுப்பு கோரியதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அவர் எழுதிய அந்த கடிதத்தில் ‘ரயில்வே துறையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷேக் ரஷீத்துக்கு பணி குறித்து எதுவும் தெரியவில்லை. மேலும், அரசு ஊழியர்களிடம் அவர் மரியாதை குறைவாக நடந்து கொள்கிறார். அவருடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது. ஆகவே, எனக்கு சம்பளத்துடன் 730 நாட்கள் விடுப்பு வேண்டும்’  என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.