டெல்லி:

பிரதமர் மோடி  இன்று சவுதி அரேபியா  செல்லும் நிலையில், பாகிஸ்தான் வான்வெளியை பிரதமர் விமானம் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு  அனுமதி மறுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 21ந்தேதி அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தடை விதித்துள்ளது.

பிரதமர் மோடி,  சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நாளை (அக்டோபர் 29) செல்கிறார். 3வது முறையாக அங்கு செல்லும் மோடி, ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் மூன்றாவது அமர்வில் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து, அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து பேசுகிறார்.  இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா செல்ல பாகிஸ்தான் வான்வழியைப் பயன் படுத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தான் முடிவு குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்திய உயர் அதிகாரி ஒருவருக்கு எழுத்துபூர்வமாக அறிக்கை அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இந்திய அரசுத் தரப்பிலிருந்து கூறுகையில், “விவிஐபி சிறப்பு விமானத்துக்காக வான்வழியைப் பயன்படுத்தக் கூடாது என பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள முடிவு வருத்த மளிக்கிறது. இதுபோன்ற அனுமதிகள் எந்தவொரு நாட்டிலும் சாதாரணமாக வழங்கப்படுகிறது. ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுப்பதற்காக, அதற்கான காரணங்களைத் தவறாகச் சித்திரிக்கும் பழைய பழக்கத்தை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.