”இந்தியா நடத்திய தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் ”- பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா குரேஷி தெரிவித்துள்ளார்.

foreign

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத தற்கொலை படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய கொடூர தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா அறிவித்ததுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுப்பட்டது. எல்லையில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பழித் தீர்க்கும் விதமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய போர் விமானம் மூலம் பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது குண்டு வீசப்பட்டது. சுமார் 1000 கிலோ எடைக் கொண்ட குண்டு வீசப்பட்டதில் கிட்டத்தட்ட 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதன்பின்னர் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “ பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானங்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் “ என தெரிவித்தார். இதற்கிடையே பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.