சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை ஆயிரத்து 300 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது நாள் தோறும் 7 குழந்தைகள் சிதைக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளை பலாத்காரம் செய்வோரை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை என அங்குள்ள பெண்கள் அமைப்புகள் வலியுறுத்திவந்தன.

இதையடுத்து குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோரை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போட வகை செய்யும் தீர்மானம் அங்குள்ள நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்டது.

இதனை தாக்கல் செய்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முகமது கான்,’’குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது. அவர்களை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

இந்த தீர்மானத்துக்கு மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
’’பொதுவெளியில் தூக்கில் போடுவது, ஐ.நா.விதிகளுக்கு எதிரானது.பாலியல் குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கில் போடும் மசோதவை நிறைவேற்றினால் உலக நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும்’’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜா பர்வீஸ் அஷ்ரப்’’ குறிப்பிட்டார்.

எனினும் இந்த தீர்மானத்துக்கு மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேறியது.

குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால்-

ஆளும்கட்சியின் இரு அமைச்சர்களும் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் பவத் சாத்ரி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் சீரன் மசாரி ஆகிய இருவரும்,குழந்தைகள் பலாத்கார குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தூக்கு என்ற சட்டத்துக்கு எதிர் குரல் கொடுத்துள்ளனர்.

சட்டம் நிறைவேறிய போது அவர்கள் இருவருமே அவையில் இல்லை.

பின்னர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்,’காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை குற்றங்களுக்கு தீர்வாகாது’’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.