டெல்லி:

ம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 5வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பகீரத முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தாக்குதலை நடத்தி வருகிறது. எல்லையில் ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(5ந்தேதி) முதல் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. அன்றையதினம்,  குப்வாரா மாவட்டத்தில் சர்ஜ்ஜிகல் தாக்குதலில் ஈடுபட்ட  இந்திய சிறப்பு படை கமாண்டோக்கள் 5 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இது இந்திய ராணுவத்தினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அன்றே அதிரடி தாக்குதல் நடத்தி, 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், நிறுவப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஏவுதளங்கள், துப்பாக்கி நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிமருந்து பதுக்கப்பட்ட இடங்களை, இந்திய ராணுவம் போபர்ஸ் பீரங்கி துப்பாக்கிகளை கொண்டு சரமாரியாக தாக்கி அழித்தது.

இதுதொடர்பாக வீடியோவையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றும்  பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

“நேற்றிரவு 10.30 மணிக்கு பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாலக்கோட் மற்றும் ஷாபூர் உள்ளிட்ட இந்திய நிலைகள் மீது சிறிய ரக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய ராணுவம் அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுத்தது” என்று இந்திய ராணுவம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் படைகள் 646 முறை தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.