ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதியான காமர் ஜாவ்த் பஜ்வா வரும் 29-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி அவரது பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு முடிவு செய்தது.  இந்த  நீட்டிப்பை எதிர்த்து ரயீஸ் ராஹி என்பவர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆஸிஃப் சயீது கோஸா, வாபஸ் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, சட்டப்பிரிவு 184-இன் கீழ் ரயீஸ் ராஹி தாக்கல் செய்திருந்த மனுவை பொது நல மனுவாக எடுத்துக் கொண்டு விசாரித்தார்.   இந்த வழக்கின் விசாரணை முடிந்து  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் ”பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி, ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியாது.   ஆனால் பதவியில் இருக்கும்போது அவரை தற்காலிகமாக இடைநீக்கம் மட்டுமே செய்ய முடியும்.  பாகிஸ்தான்  அதிபரால் ட்டுமே ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க இயலும்.

அது மட்டுமின்றி  அமைச்சரவையில் உள்ள 25 உறுப்பினர்களில் 11  உறுப்பினர்கள் மட்டுமே ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர், ஆகவே இந்த நீட்டிப்பை ரத்து செய்து இதற்கான அரசாணைக்கு தடை விதிக்கிறேன்” என்று நீதிபதி ஆஸிஃப் சயீது கோஸ்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி புதன்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இவ்வாறு பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அரசாணைக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.