டெல்லி:

டுத்த மாதம் (நவம்பர்)  திறக்கப்பட உள்ள கர்தார்பூர் வழித்தடம் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானின்  கர்தார்பூரில்தான் சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவின் நினைவிடம் அமைந்துள்ளது.  சீக்கிய மதத் தலைவரான குருநானக்கின் பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானில் உள்ள  கர்தார்பூர் குருத்வாராவுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கம்.  இங்கு  யாத்ரீகர்கள் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் 9-ம் தேதி கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பாதை விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங் மீது தாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் மரியாதைக்குரிய நபர் எனவும் புகாழரம் சூட்டியுள்ளார்.

மேலும், மன்மோகன் சிங்கை  சீக்கிய மக்களின் பிரதிநிதியாக, முறைப்படி எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுப்போம் என்றும், கர்தார்பூரில் நடைபெறும் குருநானக்கின் பிறந்தநாள் விழாவில் அனைத்து சீக்கியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த தகவல் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் பயங்கரவாதிகள் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு மன்மோகன்சிங்குக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருப்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மன்மோகன் சிங் தனது 10ஆண்டு பிரதமர் பதவி காலத்தில் ஒருமுறைகூட பாகிஸ்தானுக்குள் காலடி எடுத்து வைக்காத நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.